அரானா பக்கம்

Sunday 28 September 2014

மறக்கமுடியாத படம்

பழைய படம் பார்க்க நான் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. முக்கியமாக எம்ஜிஆர், சிவாஜி படமென்றாலே டிவியை ஆஃப் செய்துவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கலாமென்று நினைப்பேன். நெஞ்சம் மறப்பதில்லைபடத்தை மட்டும் ரொம்ப நாளாக பார்க்கவேண்டுமென்று நினைத்தேன், நேற்றுதான் டிவியில் பார்த்தேன். 1963 ஆண்டு படம் வெளிவந்துள்ளது. ஆனால் ரசிக்கும்படியான படம். நம்பியார், கல்யாண் குமார், தேவிகா இவர்கள் கதையின் மாந்தர்கள். நம்பியார் ஊரில் மிகப்பெரிய ஜமீந்தார், பணத்தால் எதையும் வாங்கிவிடலாமென்ற மனம் கொண்டவர். தன்னை விட வயதில் குறைந்தப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார். அவருடைய மகன் கல்யாண் குமார், நம்பியார்-க்கு அடுத்து அந்த ஊரின் ஜமீனாக வரப்போகிறவர். நம்பியார் கெளரவம், அந்தஸ்து பார்ப்பவர். கல்யாண் குமார் தன் வயலில் வேலைப் பார்க்கும் ஒருவருடைய மகளை விரும்புகிறார். இவர்களுடைய காதல் காட்சிகள் மிக அழகாகவும் ரசிக்கும்படியுள்ளது. தேவிகாவின் முகபாவனைகள், இருவரும் பேசும் வசனங்கள் அனைத்தும் அந்தக் காலக் காதலை எளிமையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் கல்யாண் குமார் மிகைப் படுத்தப்பட்ட முகபாவனைகளை தவிர்க்க முற்படுவதில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் நம்பியாருக்கு தெரியவர அவர் இருவரையும் பிரிக்க முற்படுகிறார். இதற்கிடையில் தேவிகாவுக்கு இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் துணிந்து ஊரைவிட்டு ஓடப் பார்க்கிறார்கள், அப்போது நம்பியார் துப்பாக்கியால் தேவிகாவை சுடுகிறார், தேவிகாவும் சாக அந்த வேதனையில் கல்யாண் குமாரும் சாகிறார். இந்தக் காட்சிகள் கல்யாண் குமார் நினைவில் இன்றும் இருப்பதாகவும் நான் மறுபிறவி எடுத்துள்ளதாவும் நம்புகிறார். அதே ஜமீந்தார் வாழ்ந்த வீடுக்கு கல்யாண் குமார் வருகிறார். மிகவும் பாழடைந்து சிலந்தி வலையால் பின்னப்பட்டு, அந்தப் பின்னலில் கடந்தகாலம் சிக்கித் தவிப்பதை கல்யாண்குமார் உணருகிறார். அப்போது அங்கே ஒரு வயதான பெரியவர் ஒருவர் வருகிறார், கல்யாண் குமார் அவரிடம் ஜமீந்தாரைப் பற்றி விசாரிக்கிறார். அது நாந்தான் என்று சொல்ல கல்யாண்குமாருக்கு மேலும் அதிர்ச்சி. முன்ஜென்மம், மறுபிறவி போன்ற விஷயங்கள் மீது கல்யாண்குமாருக்கு நம்பிக்கை வருகிறது. இப்போதும் நம்பியாருக்கு இவர்களின் காதல் மீது கோபம் வெறுப்பு உண்டாகிறது. மீண்டும் அவர்களைப் பிரிக்க ஆசைப்பட்டு கடைசியில் புதைக்குழியில் சிக்கி சாகிறார்.
என்னைப் பொறுத்தவை இந்தப் படத்தின் ஹீரோ நம்பியார் தான். ஜமீந்தார் வேடத்தில் மிடுக்கான அதே நேரம் கெத்து குறையாமல் நடித்திருக்கிறார். கடைசியில் வயதான தோற்றத்திற்கேயுரிய உடல் மொழியை தன்னுள் கொண்டுவந்து பார்வையாளர்களைப் பயமுறுத்துகிறார். 110 வயதின் தோற்றம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு அவரே சாட்சி. மேக்கப் மேனின் உழைப்பும் இதில் அதிகம். நடிகர் நம்பியார் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை படத்திற்கு படம் அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. எந்த கதாப்பாத்திரங்களுக்கும் அவர் உயிர் கொடுத்துவிடுகிறார். கல்யாண் குமார் அப்பவே தேவிகாவுக்கு அப்பா கேரக்டர் போல் தோற்றமளிப்பது, சகிக்கவில்லை. இயக்கநர் திரு.ஸ்ரீதர் திரைக்கதைக்கு ரொம்பவே மெனக்கெடுத்திருக்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை படம் குழப்பமில்லாமல் இருப்பதற்கு இயக்குனரின் திரைக்கதையே காரணம். அவர் தனது தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் எடுத்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்கோட்டில் பயணிக்கிறது. பழைய படங்களில் நாடகத்தின் சாயல்கள் அதிகமிருக்கும் இந்தப் படத்திலும் அதை தவிர்க்கமுடியவில்லை. எனக்கு இன்னொரு பிடித்தமான விஷயம் பாடல்கள். கவிஞர் திரு.கண்ணதாசன் அவர்கள் தான் படத்தின் பாடல்கள் அனைத்தியும் எழுதியுள்ளார். கடைசி ரசிகன் வரை படம் சென்றடையக் காரணம் அவர்தான். அவர் எழுதிய மிகச்சிறந்த பாடல்களில்நெஞ்சம் மறப்பதில்லைபாடலும் அடங்கும். காதலர்கள் சந்திக்கும் போதெல்லாம் பாடல்கள். நெஞ்சம் மறப்பதில்லை இரண்டு வெர்ஷனில் இருந்தாலும் அலுக்கவில்லை, வார்த்தைகள் மனதில் பதியவைக்கிறது. பி.பி.ஸ்ரீனிநிவாஸ் மற்றும் பி.சுசிலாவும் வரிகளுக்கு ஒலியை அல்ல குரலுயிர் கொடுத்துள்ளனர். இரட்டை இசையமைப்பாளர்களான திரு.விஸ்வநாதன் திரு.ராமமூர்த்தியின் பின்னணி இசையும் படத்தை வேகத்தை குறைக்கவில்லை. அப்பவே ரொம்ப பிளான் பண்ணி படத்தை எடுத்திருக்கிறார்கள். அதனால்தான் படம் இன்று வரை பேசப்படுகிறது. பணக்காரர் அல்லது ஜமீந்தார்களின் அட்டகாசம், கீழ் ஜாதி மக்களை கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தின் இன்னொரு பிடித்தமான விஷயம் நாகேஷ். தன் காதலித்தப் பெண்ணை மறக்கமுடியாமலும் அதே நேரத்தில் ஜமீந்தார் பேச்சைத் தட்டாமலும் இருக்கும் வேதனையை முகத்தில் வெளிக்காட்டுகிறார். அது சிரிப்பான காட்சியாக இருக்கிறது. அதே நேரம் ஹீரோவாக இருந்தால் பரிதாபப்படுவோம். தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப் படம் முக்கியமான படம்தான் அதை மறுப்பதற்கில்லை. அடுத்து வரும் இளையத் தலைமுறைக்கும் இந்தப் படம் பிடிக்கும். அப்போதும் சரி இப்போதும் சரி காதலுக்கு எதிர்ப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது. காதலுக்காக உயிர்த் தியாகம் செய்வதெல்லாம் என்னைப் பொறுத்தவை கேலிக்குரியவை.
FANTASY THIRILLER GENRE வகைப் படங்களை ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே நம் தமிழ் சினிமா சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது. அதுவும் முன்ஜென்மம் என்றொரு விஷயத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்  படங்கள் தமிழில் குறைவுதான். தெலுங்கு சினிமாவில் இன்று வரை இந்த மாதிரியான படங்கங்கள் வெளிவந்துகொண்டுதானிருக்கிறது, வெற்றிப் படமாகவும் அமைந்துவிடுகிறது. கலைபுலி சேகர் இயக்கி நடித்த ஜமீன்கோட்டை படமும் முன்ஜென்மம் பற்றி பேசிய படம் தான். இந்தப் படமும் திகில் கலந்த காதல் கதைதான், முன்ஜென்மத்தில் ஒன்று சேராமல் போன காதர்கள் மறுபிறவியில் ஒன்று சேர்வார்கள். காதலைத் தவிர தமிழ்சினிமா சிந்திக்கப் போவதில்லை. ஆனால் இதே GENRE வகையை ஹாலிவுட் காரர்கள் ரொம்ப அட்வாட்ஸாக எடுத்திருப்பார்கள். ஒருவன் கனவுக்குள் இன்னொருவன் நுழைவது, முன்னால் நடப்பதை TIME MACHINE மூலம் முன்பே காண்பது போன்ற அதீத கற்பனையால் உருவாகிய படங்கள் அங்கே அதிகம். உதாரணத்திற்கு INCEPTION, LOOPER. ஹாலிவுட் காரர்ளோடு நம் தமிழ் சினிமா கோலிவுட் காரர்களுடன் ஒப்பிடவில்லை. நம் கலாச்சாரம், சமூகம், மக்களுக்கு ஏற்றாற் போல்தான் நாம் படம் எடுக்கமுடியும். நம் மக்கள் எல்லா வுட் படத்தையும் பார்க்கவும் செய்வார்கள், அதைப் பற்றிய விமர்சனத்தையும் முன் வைப்பார்கள், ஏனென்றால் சினிமா என்பது பொது மொழியே.

Sunday 19 January 2014

அரானா கவிதைகள்

07/12/13

ஒளிஇல்லாதஅறை
உன்னுடையஒலி
அங்கே
வெளிச்சத்தை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
ஒளியில்லா
ஒலியின்
ஓவியம்
ஓவியத்தின்
கண்சிமிட்டல்
ஓவியத்தின்
சிரிப்பு
ஓவியத்தின்
ஏக்கம்
இவையெல்லாம்
ஒளியில்லா
அறையின்
ஒலிகள்
ஒலிகளால்
பார்க்கப்படுகிறேன்
ஒளிகளால்
கேட்கப்படுகிறேன்…!
***
மெய்மறந்தேன்
பொய்மறந்தேன்
இவைகள்
உன்னை
நினைக்கச்சொல்கிறது…!
***
அறிமுகம் இல்லாத
ஒருவர்
பெயர்
ஊர்
சொல்லி
என்னிடம் அறிமுகமானார்
மீண்டும்
அறிமுகமில்லாத
ஒருவருடன்
என்னை
அறிமுகப் படுத்திக்கொண்டேன்…!
***
காற்று
ஊடுருவாத
இடத்தில்
வசிக்கப்பழகுகிறேன்
சுவாசிக்க
மறக்கிறேன்
உணராத
உணர்வு
ஆட்கொண்டு
தேகத்தில்
ஊடுருவி
உளவுப்பார்ப்பவன்
போல்
ஆழ்மன
அமைதியை
ஒளிந்து பார்க்கிறான்
அங்கே
நான்
பயந்து உட்கார்ந்திருக்கிறேன்…!
***
கலவி
இப்படித்தான்
முடியுமோ
தேகம் முழுவதும் படர்ந்திருக்கு நீர்த்துளி
உதடுகளை நனைத்து
நகங்களை கத்தியாக
உருமாற்றி
கலவி
இப்படித்தான்
வன்முறையுடன்
முடிந்திருக்கிறது
இரவைப் பசியால் விழுங்கினோம்
நிலவை ருசியால் பருகினோம்
தெரியாமல் தொட்டு
தெரியாமல் முத்தமிட்டு
தெரிந்தும்
தெரியாமல்
ஒட்டிக்கொண்டு
கலவியை
நாம்
கற்றுக் கொண்டோம்
கலவியிமிருந்து அல்ல…!


Monday 4 November 2013

29/10/2013
இன்றுதான் ஞாபகம் வந்தது
நாம் பேசிக்கொள்ளாத நாட்கள்
நாம் பார்க்காத நாட்கள்
நாம் கைக்கோர்க்காத நாட்கள்
இன்றும்
உன்னுடைய புகைப்படத்தைப் பார்க்கிறேன்
அதிலிருக்கும்
உன் சிரிப்பைப் பார்க்கிறேன்
உன் கண்களைப் பார்க்கிறேன்
உன் நினைவுகளைப் பார்க்கிறேன்
இன்றுதான் ஞாபகம் வந்தது
இதையெல்லாம் உன்னிடம் சொல்ல
*****
அவள் பெயரைக் கேட்டேன்
ம்என்றாள்
அவள் முகவரியைக் கேட்டேன்
ம்என்றாள்
கடைசிவரைம்மைத் தவிர
வேறெதுவும் சொல்லவில்லை
ம்
என்னை பலவீனம் கொள்ள செய்தது
இருந்தும்
ம்
எனக்கு பிடித்துப்போனது.

அரானா அழகுச்செல்வன்

Tuesday 1 October 2013

கவிதை எழுதி ரொம்ப நாளாச்சு. எதைப் பற்றி எழுதவேண்டும் என்று தெரியவில்லை. ஏதோ சில வார்த்தைகளைக் கோர்த்து எழுதிவிட்டேன்.
உன்னிடம் பேச
ஆயிரம் இல்லை
இரண்டாயிரம் இல்லவே இல்லை
கோடிக்கான நினைவுகள்
பகிராத உணர்வுகள்
என்னை உன்னிடம் ஒப்படைக்க
சரியான தருணம் வரும் வரை
காத்திருப்பேன்
மீதமிருக்கும் வார்த்தைகள்
மீதமிருக்கும் மூச்சுக்காற்று
மீதமிருக்கும் முத்தங்கள்
மீதமிருக்கும்
மீளாத நினைவுகள்
அரானா அழகுச்செல்வன்
கதவுகளை பூட்டப்போகும்போது
சில யோசனை
சில சந்தேகம்
சில தடுமாற்றம்
இது மனநோய் இல்லை
ஜன்னலிடம் சொல்லிவிடுங்கள்
கடிகாரத்திடம் சொல்லிவிடுங்கள்
நாற்காலியிடம் சொல்லிவிடுங்கள்
வளர்க்கும் பூச்செடியிடம் சொல்லிவிடுங்கள்
வீடு திரும்பும் வரை கதவைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அரானா அழகுச்செல்வன்

டைரிகுறிப்பு அல்ல


இதை டைரிக்குறிப்பு என்று சொல்லமுடியாது, டைரி எழுதுவதற்கு எனக்கு தைரியம், அதில் உண்மையை மட்டும் தான் எழுதவேண்டும். ஆனால் இதில் நான் எழுதப்போவது அந்நாளில் என் வாழ்வில் என்ன நடந்த சம்பவங்கள், பார்த்தக் காட்சிகள் தான்.
வடபழனி, சென்னை
17/7/2013
வில்லிவாக்கத்திலிருந்து வடபழனிக்கு வந்துவிட்டேன், AVM STUDIO அருகில் நண்பர் விஷ்சபாலா -வின் நண்பர் ரவி அவர்கள் அழையா விருந்தாளியாக தங்கவைக்கப்பட்டேன். நண்பர் விஷ்வபாலா படத்திற்கு கதை விவாதத்திற்கு வந்தேன், வந்த முதல் நாள் கதையை விவாதம் செய்தோம், இரண்டாவது நாளிலிருந்து போகவில்லை, தயாரிப்பாளர் பின் வாங்கிவொட்டார். இரண்டாவது நாளிலிந்து வேலையில்லாமல் இருந்தேன். டென்சில் அண்ணனின் நண்பர் விஜயபாலா என்னை அழைத்து அவர் படத்திற்கு கதை விவாதத்திற்கு அழைத்தார். அங்கே தான் தினமும் கதை விவாதம் செய்தோம்.
21/7/2013
நான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தெலுங்கு பேசும் பாட்டி ஒருவர் தனியாக தங்கியிருந்தார், அவருடைய மகன் இன்று வருகிறார் போல, அதை எல்லோரிடமும் மகிழ்ச்சியான முகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார், அந்தப் பாட்டியை நான்கு நாட்களாகத்தான் பார்க்கிறேன். இன்று அவர் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக சந்தோஷம். காலையிலே மீன் வாங்கி சமைத்துக் கொண்டிருண்டிருந்தார். பாட்டி ஆந்திரா என்பதால் மசாலா வாசனை அடுத்த இரண்டு அறையை கடந்து காற்றோடு காற்றாக கலந்து கொண்டிருந்தது. எங்கள் அறையில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, பாட்டியிடம் சென்று WATERCAN- ல் தண்ணீர் கேட்டேன், அப்போது அவர் மகன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பாட்டி என்னிடம் மகன்..வந்திருக்கான் என்றார், நான் எந்த ஊரிலிருந்து வந்திருக்கார் என்று கேட்டேன், பாட்டி சூலூர்பேட்டை என்று கூறினார். நான் வேறேந்த கேள்வியும் கேட்காமல் தண்ணீரை மட்டும் வாங்கி வந்துவிட்டேன்.
22/7/2013
மாலை செய்தி இதழில்
1.    கர்ப்பிணி கொலை, தலையில் கல்லைப் போட்டு கணவன் கைது, திருகோவிலூர், விழுப்புரம்.
2.    அம்மாவை கண்டுபிடிச்சு கொடு பிள்ளாயாரப்பா, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கோவிலில் குழந்தைகள் கண்ணீர் மனு, முத்துப்பேட்டை, திருவாரூர்.
இந்த இரண்டு செய்திகளும் என்னை ரொம்பவே பாதித்தது. பெண்களும் குழந்தைகளும் எப்படியெல்லாம் சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள், மன உளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள் என்று தினசரி இதழ்கள் நம் கண்முன்னே வார்த்தைகளாகவும் காட்சிகளாகவும் பதிவுசெய்கின்றன. என்னால் வருத்தப்பட மட்டுமே முடியும். FACEBOOK மற்றும் TWITTER –ல் பதிவேற்றம் செய்து பகிரமுடியும், அதற்கு மேல் என்னால்…?

Wednesday 26 June 2013

ரசிக்கமுடியவில்லை

இன்று காலை (20/06/2013) ரொம்ப நாள் கழித்து வானவில்லைப் பார்த்தேன். அதிலும் எனக்கு மூன்று வண்ணங்கள் மட்டுமே தெரிந்தது. நான்கு வண்ணங்களைவானம் தின்றிருக்கும் போலும். உடனே அம்மாவை கூப்பிட்டேன், ’துணி துவைக்கறத விட்டுட்டு வரவா நீயே போய் பாரு’ அப்பிடின்னு சொல்ல நான் திரும்பவும்மாடிக்கு போய் வானவில்லைப் பார்த்து ரசித்தேன்திருத்தங்கலில் வானவில் வருவது அதிசயம் தான். ஆனால் யாருமே இதை கவனிக்கவில்லை. குழந்தைகள்பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்அப்பாக்கள் வண்டியில் வேலைக்கு போய்க்கொண்டிருந்தார்கள். வானவில்லை ரசிப்பதற்கு இங்கு யாருக்குமேவிருப்பமுமில்லைநேரமுமில்லை. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை முறை வானவில்லைப் பார்த்திருப்பான் என்ற விடைத் தெரியாத கேள்விவானவில்லோடு கலந்திருந்தது. நான் சிறுவயதில் வானவில்லை நான்கு அல்லது ஐந்து முறை பார்த்திருப்பேன். அறைவட்டமாக இருப்பதைவிட முழுவட்டமாகஇருந்தால் எனக்கு இன்னும் நிறைய வானவில்லைப் பிடித்திருக்கும். மீண்டும் வானவில் வருவதற்கு எத்தனை நாட்கள்மாதங்கள்ஆண்டுகள் ஆகுமென்றுதெரியாது. அதை நான் பார்ப்பேனா என்ற சந்தேகமும் இருகிறது. வானவில் வானத்தின் நண்பனாமனைவிஎதிரியாகுழந்தையா..? என்ன உறவாகயிருந்தாலும்சரி வானத்திற்கு அழகு வானவில் தான். வானமே நினைத்தாலும் வானவில் வருவதை தடுக்கமுடியாது. தன்னை யாரும் பார்க்கவில்லையென்று ஏக்கத்திலோகோபத்திலோ வெறுத்தோ வானவில் நினைத்தாலும் வராமலும் இருக்கமுடியாது.
வானவில் பற்றியக் கவிதைகள் நிறைய எழுதியாகிவிட்டது. அதனால் நான் கவிதை எழுதப் போவதில்லை. இத  ாரும் படிக்காத ஒரு கடிதமாக நினைத்துவானவில்லுக்கு சமர்பிக்கிறேன்ஏழு வண்ணங்கள் இந்தக் கடிதத்தில் இல்லை.
அரானா

Wednesday 19 June 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 21

(இரவு 19/06/2013 – 20/06/2013 காலை)
மூன்று நாள் தொடர்ந்து கனவை எழுதவேண்டுமென்று நினைத்தேன்ஆனால் கனவு என் நினைவைவிட்டு விரைவில்மறைந்துவிடுகிறது. இன்று எழுந்தவுடன் எழுத உட்கார்ந்துவிட்டேன்.
சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தின் விளம்பரத்திற்காக ஷாருக்கானும் தீபிகா படுகோனும் வந்திருக்கிறார்கள். அவர்களுடன்படம் சம்பந்தப் பட்ட விஷயங்களைக் கேட்டுகொண்டிருக்கிறேன். அப்போது சோனம் கபூர் வர நான் ஓடிப்போய்அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிகொள்கிறேன். சோனம் கபூர் அழகில் மயங்கி ரொம்ப நேரம் பார்த்துகொண்டிருந்தேன்.தனுஷ் நடிப்பைப் பற்றி என்னிடம் நிறைய சொன்னார். மிகப்பெரிய சினிமா ஸ்டார் என்றில்லாமல் என்னுடன்எல்லோரும் சகஜமாக பேசி பழகினார்கள்.
(இன்னும் கனவுகள் வரும்)